பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படுள்ளது.
பழனி,
பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் லதா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கோவில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய், போலீஸ், சுகாதாரம், போக்குவரத்து என அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களுக்கான அனுமதி, முன்னேற்பாடு வசதிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது எனவும், இதில் கோவில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பக்தர்களில் 3 ஆயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க உள்ளனர் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, அடிவார பகுதியில் உள்ள தங்கும்விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு அமைத்து சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் 7.15 மணி வரை ரோப்கார், மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதை வழியே அனுமதிக்கப்படுவர். பின்னர் கருப்பணகவுண்டன்வலசு அருகே பைபாஸ் சாலையில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கவும், அங்கிருந்து பழனி நகருக்கு வர சிறப்பு பஸ்கள் இயக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் கும்பாபிஷேகம் குறித்து கோவில் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 18-ந்தேதி மாலை பூர்வாங்க பூஜைகள் தொடங்குகிறது. எனவே அன்று ஒரு நாள் மட்டும் மலைக்கோவிலில் சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடைபெறும். மேலும் 23-ந்தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜை தொடங்கி, கலசத்தில் ஆவாஹணம் செய்து யாகசாலையில் எழுந்தருளியுள்ள சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம் முடிவடைந்து மகா தீபாராதனைக்கு பின்பு வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம். 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலபூஜை கட்டளை, தங்கரத புறப்பாடு, ஆகியவை நடைபெறாது. 28-ந்தேதிக்கு பிறகு வழக்கம்போல் நடைபெறும். அதேபோல் மலைக்கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான சேவை 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வடக்கு கிரிவீதியில் உள்ள குடமுழுக்கு நினைவரங்குகளில் நடைபெறும்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்கு நடைபெறும் அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வின்போது சொர்ணபந்தனத்தில் அனைத்து பக்தர்கள் சார்பாக கோவில் நிர்வாகத்தில் விலை உயர்ந்த தங்கம், நவரத்தின கற்கள் வைக்கப்படும். இந்தவகைக்கு பக்தர்கள் பங்களிப்பு செய்ய விரும்பினால் கோவிலில் உரிய ரசீது பெற்று கொள்ளலாம். கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கம், கிரிவீதிகளில் 18 பெரிய டி.வி.க்கள் மற்றும் கிரிவீதி, மத்திய பஸ்நிலையம், கோவில் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் 8 எல்.இ.டி. வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் திருப்பணி வங்கி கணக்கில் நன்கொடை செலுத்திவிட்டு அதன் விவரம், ரசீது வழங்க வேண்டிய முகவரியை குறிப்பிட்டு கோவில் jceomdu 32203.hrce@tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவும், மேலும், மின்பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்கும் பக்தர்கள் ரசீது வழங்க ஏதுவாக குறிப்பு காலத்தில் தங்களது பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடவும். அதேபோல் கும்பாபிஷேக யாகசாலை பூஜைப்பொருட்கள், அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் வழங்க விரும்பும் பக்தர்கள் தண்டபாணி நிலைய தங்கும் விடுதியில் ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் புண்ணிய தீர்த்தங்களான கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதை, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, அமராவதி, பவானி, தாமிரபரணி, வைகை, கோடி தீர்த்தம் மற்றும் இதர புண்ணிய தீர்த்தங்களை உரிய விரத நியமத்துடன் எடுத்து வந்து மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு பதிவு செய்யும் அலுவலகத்தில் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.