கழுகுமலையில் 6 ஆயிரம் லிட்டர் எண்ணெய் பறிமுதல்
கழுகுமலையில் 6 ஆயிரம் லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
நாலாட்டின்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் மாரியப்பன் தலைமையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு உள்ளிட்ட குழுவினர் கழுகுமலையில் உள்ள எண்ணெய் ஆலைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு தனியார் ஆலையில் தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்படாத டின்களில் எண்ணெயை சேமித்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கிருந்த 3,690 லிட்டர் கடலை எண்ணெய், 2,295 லிட்டர் பாமாயில் என மொத்தம் 5,985 லிட்டர் எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 1,100 காலி எண்ணெய் டின்களும், 70 பிளாஸ்டின் எண்ணெய் கேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று கழுகுமலையில் உள்ள ஓட்டலில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கு நிறமூட்டப்பட்ட 12 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறாததால், அதனை பெறுமாறும் அறிவுறுத்தினர்.
கழுகுமலையில் உள்ள பல்பொருள் அங்காடியில் சோதனை நடத்தியதில், அங்கு காலாவதியான பருப்பு, மாவு உள்ளிட்ட 10 கிலோ உணவுப்பொருட்களையும், குளிர்பானங்களையும் பறிமுதல் செய்தனர். அச்சிடப்பட்ட காகிதத்தில் தின்பண்டங்களை விற்பனை செய்த கடைக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர்.