குரூப்-1 தேர்வை 6 ஆயிரம் பேர் எழுதினர்


குரூப்-1 தேர்வை 6 ஆயிரம் பேர் எழுதினர்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் 28 மையங்களில் நடைபெற்ற குரூப்-1 தேர்வை 6 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.

திண்டுக்கல்

குரூப்-1 தேர்வு

தமிழகத்தில் காலியாக உள்ள துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-1 தேர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் குரூப்-1 தேர்வு நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 8 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் 28 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

5 ஆயிரத்து 992 பேர் எழுதினர்

ஆனால் காலை 8.30 மணிக்கே தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் வரத்தொடங்கினர். ஒவ்வொரு தேர்வரும் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் கைக்கெடிகாரம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

ஒவ்வொரு அறையிலும் தலா 20 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டு, ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி திருமணம் ஆனவர்களும் தேர்வு எழுதினர். மாவட்டம் முழுவதும் 28 மையங்களிலும் மொத்தம் 5 ஆயிரத்து 994 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். ஆனால் 2 ஆயிரத்து 640 பேர் தேர்வு எழுதவரவில்லை.

தேர்வர்கள் கருத்து

குரூப்-1 தேர்வு குறித்து தேர்வர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

ஜனனி (ஒட்டன்சத்திரம்) :- குரூப்-1 தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. பெரும்பாலான வினாக்கள் சிந்தித்து விடையளிக்கும் வகையில் இருந்தன. பொதுஅறிவு தொடர்பான வினாக்கள் அதிக அளவில் கேட்கப்பட்டு இருந்தன.

ராஜஸ்ரீ (கொடைக்கானல்):- பொது அறிவு வினாக்கள் உள்பட அனைத்து வினாக்களும் மிகவும் எளிதாக இருந்தன. தமிழக அரசின் திட்டமாக அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் பற்றியும் வினா கேட்கப்பட்டு இருந்தது.

ராஜா (நத்தம்) :- நான் 3 ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி இருக்கிறேன். கணிதம், உளவியல், பொதுஅறிவு உள்ளிட்ட வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தன. ஆனால் கணிதம் தொடர்பான வினாக்கள் சிந்தனை திறனை வெளிப்படுத்தும் வகையில் இருந்தன. இதனால் சிறிது தடுமாற்றமாக இருந்தது.

ஜான் (வத்தலக்குண்டு):- நான் 2-வது முறையாக குரூப்-1 தேர்வு எழுதுகிறேன். ஏற்கனவே தேர்வு எழுதி இருந்ததால் நன்றாக தயாராக இருந்தேன். நடப்பு நிகழ்வுகள் தொடர்பான வினாக்கள் கணிசமாக கேட்கப்பட்டு இருந்தன. வினாக்கள் அனைத்தும் எளிதாக விடையளிக்கும் வகையில் இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story