புதிதாக 606 மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன
நாகை மாவட்டத்தில் சிறப்பு பராமரிப்பு பணி காரணமாக புதிதாக 606 மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன என மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் சிறப்பு பராமரிப்பு பணி காரணமாக புதிதாக 606 மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன என மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பராமரிப்பு பணி
நாகை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சதீஸ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவின்படி கடந்த ஜூன் 15-ந் தேதி முதல் மின் சீரமைப்பு பணிகள் நாகை மாவட்டத்தில் நடந்து வருகிறது. அதன்படி நாகை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 164 மின்னூட்ட பாதைகளில் இதுவரை 498 களப்பணியாளர்கள் மின்பாதை பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.5 ஆயிரத்து 495 இடங்களில் மின்பாதை இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டுள்ளன. தாழ்வு மற்றும் உயர் மின் அழுத்த பாதைகளை சரிசெய்ய 606 புதிய மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. 898 இடங்களில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.
30-ந்தேதி வரை நடக்கிறது
982 இடங்களில் தாழ்வாக சென்ற கம்பிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஆயிரத்து 144 இடங்களில் சாய்வான மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு, ஆயிரத்து 17 இடங்களில் ஸ்டே கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளன.மேலும் 810 புதிய வகை டிஸ்க் பீங்கான், 12 கிலோ மீட்டர் புதிய மின்கம்பிகள் மற்றும் 31.1 கிலோ மீட்டர் தூரம் பழைய மின் வழிதடத்திற்கு பதிலாக புதிய மின் தடை கம்பி மாற்றப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பராமரிப்பு பணி வருகிற 30-ந் தேதி(சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.