84 தொழில் முனைவோர்களுக்கு ரூ.62¾ கோடி கடன்
84 தொழில் முனைவோர்களுக்கு ரூ.62¾ கோடி கடன் உதவியை கலெக்டர் பூங்கொடி வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட தொழில் மையம் சார்பில் மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி, 84 தொழில் முனைவோர்களுக்கு ரூ.62 கோடியே 79 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தொழில் தொடங்குவதற்கு தேவையான கடன் வசதிகளை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி கொடுப்பது தான் இந்த முகாமின் நோக்கமாகும்.
2023-24-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 10 ஆயிரத்து 373 தொழில் முனைவோர்களுக்கு ரூ.1,090 கோடியே 35 லட்சம் வங்கி கடனும், 2-வது காலாண்டில் 8 ஆயிரத்து 158 தொழில் முனைவோர்களுக்கு ரூ.483 கோடியே 40 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கு சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 220 கோடியே 61 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே உத்வேகத்துடன் வங்கிகள் செயல்பட்டு தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் மாநிலத்தில் முதல் மாவட்டமாக திண்டுக்கல்லை கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார். முகாமில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (மதுரை) மண்டல மேலாளர் புவனேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம், மாவட்ட தொழில் மைய மேலாளர் (பொருளாதார புலனாய்வு) நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.