மூதாட்டியை கொன்று 63½ பவுன் நகைகள்-ரூ.10 லட்சம் கொள்ளை
மூதாட்டியை கொன்று 63½ பவுன் நகைகள்-ரூ.10 லட்சம் கொள்ளை
தொட்டியம்,மே.18-
தொட்டியத்தில் மூதாட்டியை கொன்று 63½ பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூதாட்டி
திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரா நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 65). இந்த தம்பதிக்கு மணிகண்டன் என்ற மகனும், சத்யபிரியா என்ற மகளும் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது. கருப்பண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார்.
மணிகண்டன் நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். மேலும் அவர் அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். சத்யபிரியா திண்டுக்கல்லில் கணவருடன் வசித்து வருகிறார்.
வீட்டில் இருந்து துர்நாற்றம்
இதனால் ராஜேஸ்வரி மட்டும் தொட்டியத்தில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக ராஜேஸ்வரி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. மேலும் கதவின் வெளிப்பக்கம் பூட்டு போடப்படாமல் இருந்ததால் அவர் வீட்டுக்குள் இருப்பார் என அக்கம்பக்கத்தினர் நினைத்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் தொட்டியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், தொட்டியம் போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் முத்தையா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கொலை
மேலும் கதவை திறந்து உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது, வீட்டுக்குள் ராஜேஸ்வரி கை, கால்கள், வாய் ஆகியவை துண்டால் கட்டப்பட்டு இருந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் அவர் 4 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
அதுமட்டுமின்றி வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ராஜேஸ்வரி தனியாக இருப்பதை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் நுழைந்து ராஜேஸ்வரி சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது கை, கால்களை மற்றும் வாயை துணியால் கட்டி கொள்ளையடித்துள்ளனர். அப்போது, கை, கால் மற்றும் வாயை பலமாக கட்டியதால் ராேஜஸ்வரி மூச்சுத்திணறி இறந்து இருக்கலாம் என்றும், கொள்ளையடித்த பின் மர்ம ஆசாமிகள் கட்டுகளை அவிழ்க்காமல் அப்படியே விட்டு வ சென்றதால் அவர் மூச்சு திணறி இறந்து இருக்கலாமா? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
63½ பவுன் தங்க நகை-ரூ.10 லட்சம் கொள்ளை
இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரியின் மகன் மணிகண்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வந்து பார்த்ததில் வீட்டில் இருந்த 63½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி.சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் லீலி கொள்ளை நடந்த வீட்டை மோப்பம் பிடித்துவிட்டு சிறிதுதூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர் சுர்ஜித் தலைமையிலான போலீசார் முக்கிய தடயங்களை சேகரித்து கொண்டனர். மேலும் அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
பின்னர் போலீசார் ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.