பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 64 கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 64 கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்
x
தினத்தந்தி 27 April 2023 7:00 PM GMT (Updated: 27 April 2023 7:00 PM GMT)

தேனி குட்செட் தெருவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 64 கட்டிடங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. கோவிலுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

தேனி

குட்செட் தெரு

தேனி-மதுரை இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் தேனி ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்துக்கான குட்செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த குட்செட் பகுதிக்கு பெரியகுளம் சாலையில் இருந்து செல்லும் குட்செட் தெருவில் நீண்டகாலமாக ஆக்கிரமிப்பு இருந்தது. வீடுகள் கட்டி சிலர் வசித்து வந்ததோடு, சில கடைகளும் நடந்தப்பட்டு வந்தன.

குட்செட் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்தது. அதற்காக தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியது. மாவட்ட நிர்வாகம் சார்பில், அங்கு நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இருப்பினும் சிலருக்கு மாற்று இடம் கிடைக்காமல் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

இதையடுத்து குட்செட் தெரு மற்றும் ரெயில்வே தண்டவாளத்தையொட்டி ஆக்கிரமிப்புகளை அகற்ற ரெயில்வே துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஒரு கோவில், வீடுகள், கடைகள் என மொத்தம் 66 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. இதில் பலர் தங்களின் வீடுகள், கடைகளை காலி செய்து விட்டு சென்று விட்டனர். சிலர் காலி செய்யாமல் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ரெயில்வே பாதுகாப்பு உதவி கமிஷனர் சுபாஷ் 50-க் கும் மேற்பட்ட போலீசார், மதுரை ரெயில்வே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் 14 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றாத சிலரும் தங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு காலி செய்தனர். இதையடுத்து ஒவ்வொரு கட்டிடங்களாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மொத்தம் 64 கட்டிடங்கள் ஒரே நாளில் இடித்து அகற்றப்பட்டன.

விநாயகர் கோவில்

ரெயில்வே தண்டவாளம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் ஒரு பகுதி ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதை இடிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டதால் ரெயில்வே அதிகாரிகள் காலஅவகாசம் வழங்கினர். அதுபோல், ஒரு அடுக்குமாடி கட்டிடமும் நீதிமன்ற நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் இடிக்கப்படவில்லை என்றும், அதை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ரெயில்வே துறையின் மதுரை கோட்ட முதன்மை பொறியாளர் வில்லியம், உதவிக்கோட்ட பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், வெள்ளைத்துரை மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story