3 ஆண்டுகளில் ரூ.65½ லட்சம் அபராதம் வசூல்


3 ஆண்டுகளில் ரூ.65½ லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளில் ரூ.65½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளில் ரூ.65½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், சுற்றுலா பயணிகளின் வருகையால் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்பாடு அதிகம் இருந்ததால், ஒரு லிட்டர், 2 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு நீலகிரியில் ஓரளவு குறைந்தாலும், தற்போது வரை பிளாஸ்டிக் பயன்பாடு இருந்து கொண்டுதான் வருகிறது. இந்தநிலையில் கொரோனா பாதிப்புக்கு பின்னர், கோடை சீசனான கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 8 லட்சம் பேர் நீலகிரிக்கு வந்து சென்று உள்ளனர். இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு கோர்ட்டு அறிவுறுத்தி வருகிறது.

தீவிர கண்காணிப்பு

இந்தநிலையில் தற்போது நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கல்லார், பர்லியார், குஞ்சப்பனை, கக்கனல்லா, நாடுகாணி, தாளுர், சோளாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு, கெத்தை உள்பட அனைத்து சோதனைச்சாவடிகளிலும் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் சோதனை் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் அரசு பஸ்களிலும் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வரப்படுகிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அபராதம் வசூல்

நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கை காரணமாக 80 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. ஆனாலும், சுற்றுலா பயணிகள் தெரியாமல் பிளாஸ்டிக்குகளை கொண்டு வந்து விடுகின்றனர். அதன் மூலம் 20 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறது. அதையும் முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தில் மாவட்ட எல்லைகளில் 15 இடங்களில் தனியாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் அங்கேயே பறிமுதல் செய்யப்படுகின்றன. இதேபோல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதற்காக 2020-ம் ஆண்டு ரூ.24.93 லட்சம், 2021-ம் ஆண்டு 12.50 லட்சம், கடந்த ஆண்டு ரூ.28 லட்சம் என ரூ.65.43 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும் பசுமை நிதியில் இருந்து பிளாஸ்டிக் ஒழிப்புக்கு நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story