65 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
குமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
குமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெங்கு பாதிப்பு
குமரி மாவட்டத்தில் தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல், சளியால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே குமரி மாவட்டத்தில் 65 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 318 கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்கிறார்கள். இந்த ஆய்வு நேற்று பெருவிளை பகுதியில் நடந்தது. சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தலைமையில் அதிகாரிகள் வீடு வீடாக சென்றனர். அங்கு வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி, குடம் உள்ளிட்டவற்றில் டெங்கு கொசு உற்பத்தி இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.
நிலவேம்பு கசாயம்
அப்போது காய்ச்சல் அல்லது சளி இருந்தால் அவர்களுக்கு பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.
இது தவிர அனைத்து வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியும் தொடங்கியது. அதன்படி பெருவிளையில் உள்ள 4-வது வார்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது. பெரியவர்களுக்கு 50 மில்லியும், சிறியவர்களுக்கு 20 மில்லியும் கொடுக்கப்படுகிறது. இதேபோல் அனைத்து வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட உள்ளது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.