மலர் கண்காட்சியை பார்வையிட்ட 65 ஆயிரம் சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியை 65 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
60-வது மலா் கண்காட்சி
தமிழகத்தின் தலைசிறந்த கோடைவாசஸ்தலமான கொடைக்கானலுக்கு, மகுடம் சூட்டும் வகையில் அமைந்திருப்பது அங்குள்ள பிரையண்ட் பூங்கா. இங்கு ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி அங்கு 60-வது மலர்கண்காட்சி கடந்த 26-ந்தேதி தொடங்கியது. சுற்றுலா பயணிகளின் நலன் கருதி 2 நாட்கள் நீட்டிக்கப்பட்ட மலர் கண்காட்சி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 5 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவில் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா வளாகத்தில் மலர்களால் ஒட்டகச்சிவிங்கி, வாத்துகள், பூக்கூடை, தோனி டீ-சர்ட், மீன் ஆகிய உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதேபோல் காய்கறிகளால் ஆன தோரா புஜ்ஜி, காட்டெருமை, வரிக்குதிரை, மயில்கள், முயல் உள்ளிட்ட உருவங்கள் இடம்பெற்றிருந்தன.
65 ஆயிரம் சுற்றுலா பயணிகள்
வனத்துறை சார்பில் புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட உருவங்களும் தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது. மேலும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலைக்காய்கறிகள் சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதுமட்டுமின்றி சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கும் வகையில் பாப்பி, மேரி கோல்ட், ஆஸ்டோமேரியா, லில்லியம் உள்ளிட்ட லட்சக்கணக்கான பூக்கள் பூங்கா வளாகத்தில் பூத்து குலுங்கின.
கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள், பிரையண்ட் பூங்காவுக்கு வந்து மலர்கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். அந்த வகையில், கடந்த 5 நாட்களில் மட்டும் மலர் கண்காட்சியை 65 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் ரூ.18 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.
கோடைவிழா நிகழ்ச்சிகள்
இதனிடையே கோடைவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் கொடைக்கானலில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று நடந்த மேஜிக் ஷோ, இசை கச்சேரி, மிமிக்ரி, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் கொடைக்கானலில் லேசான சாரல் மழையுடன் மேகமூட்டங்கள் தரையிறங்கி தவழ்ந்து சென்ற ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.