வாடிவாசலில் இருந்து 655 காளைகள் சீறிப்பாய்ந்தன


வாடிவாசலில் இருந்து 655 காளைகள் சீறிப்பாய்ந்தன
x

அன்னவாசல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 655 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

அன்னவாசல் அருகே உள்ள மருந்தாந்தலை அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று காலை நடைபெற்றது. முதலில் 655 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 235 மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை, கீரனூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 655 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வீரர்களை பந்தாடிய காளைகள்

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு சில மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர். திமிறிய காளைகளை சில காளையர்கள் திமிலை பிடித்து அடக்கினர். சில ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடின. அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் வாகப்பட்டி சண்முகம் (வயது 21), களமாவூர் ரகு (22), திருச்சி சீனிவாசன் (21), அன்னவாசல் தினேஷ் (22), மாத்தூர் சிவபாலன் (18), முள்ளூர் செல்வம் (25), கீழக்குறிச்சி சிவக்குமார் (24) உள்பட 22 பேர் காயமடைந்தனர். பின்னர் அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். படுகாயமடைந்த ராஜேஸ் (21) மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பரிசுகள்

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், சில்வர் அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை அன்னவாசல் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமானோர் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்திரி தலைமையில், அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story