புதுமைப்பெண் திட்டத்தில் 658 மாணவிகள் தேர்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 658 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா ஏ.டி.எம். கார்டுகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 658 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா ஏ.டி.எம். கார்டுகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
புதுமைப்பெண் திட்டம்
கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் புதுமைப் பெண் திட்ட தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி. ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா 256 மாணவிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
உதவியாக இருக்கும்
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி திட்டம் தற்போது 'புதுமைப் பெண்' திட்டமாக மாற்றப்பட்டு, உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் 12-ம் வகுப்பு முடித்து மேற்படிப்பிற்கு கல்லூரிகளில் சேர்ந்து படிக்க இந்த பணம் மிகவும் உதவியாக இருக்கும். கல்லூரி படிப்பில் மாணவிகளின் சேர்க்கை விகிதம் குறைவாக இருக்கிறது. அதன் காரணத்தினால் முதல்-அமைச்சர் இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
658 மாணவிகள் தேர்வு
நமது மாவட்டத்தில் 658 மாணவிகள் இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கி இன்று 256 மாணவிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவிகள் கல்லூரி படிப்பிற்கு செலவு செய்து உயர்கல்வி பயில்வதற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் ரத்தசோகை விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவர் விஜயா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் நன்றி கூறினார்.