ரூ.66 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு; 3 தொழில் அதிபர்கள் கைது- மதுரையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
மதுரை கீழமாசி வீதியை சேர்ந்த 3 தொழில் அதிபர்கள் சுமார் ரூ.66 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்ததை தொடர்ந்து, புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மதுரை கீழமாசி வீதியை சேர்ந்த 3 தொழில் அதிபர்கள் சுமார் ரூ.66 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்ததை தொடர்ந்து, புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு
மதுரை பங்கஜம் காலனி பகுதியை சேர்ந்த குணாளன், கதிரவன் மற்றும் அருண்சக்கரவர்த்தி ஆகிய 3 ெதாழில் அதிபர்களும், மதுரை கீழமாசிவீதி பகுதியில் மளிகை பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் மொத்த விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். சோப்பு, ஷாம்பூ, பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களுக்கான நிறுவன ஏஜென்சி நடத்தி வருகின்றனர். சில்லறை வியாபாரிகளுக்கு பொருட்கள் வினியோகம் செய்து வருகின்றனர்.
இவர்கள் 3 பேரும் சட்டத்திற்கு புறம்பாக வெளிமாவட்ட வணிகர்களுக்கு விற்பனை செய்யும் பொருட்களுக்கான கமிஷன் தொகை மற்றும் விற்பனை ரசீதை கணக்கில் சேர்க்காமல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகார்கள் மாநில வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு சென்றபோதும், கண்டும் காணாமல் இருந்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, குறிப்பிட்ட தொகைக்கு மேல் வணிகம் செய்யும் வணிகர்களின் ஜி.எஸ்.டி. கணக்குகள் மத்திய ஜி.எஸ்.டி. அலுவலக கண்காணிப்பிற்கு சென்று விடும். அதன் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டவர்களை ஜி.எஸ்.டி. புலனாய்வு இயக்குனரகம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் கண்காணிக்க தொடங்கியது.
இதில், வரி ஏய்ப்பு உறுதி செய்யப்பட்டதால், கடந்த 15 நாட்களாக அவர்களிடம் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒரு லேப்டாப் உள்பட 6 கம்ப்யூட்டர்கள் கைப்பற்றப்பட்டு அதில் இருந்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை இறுகியது.
கைது
இதற்கிடையே, கடந்த 2 நாட்களாக சென்னை, கோவை மற்றும் மதுரையை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி. புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் மேற்கண்ட தொழில் அதிபர்களின் வீடு, கடைகள் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை கீழமாசிவீதியை சுற்றிலும் உள்ள அவர்களுக்கு சொந்தமான 12 வணிக நிறுவனங்களில் ஒரே நேரத்தில் நடந்தது. அத்துடன், 3 வணிகர்களையும் கைது செய்து பீபி குளத்தில் உள்ள ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்கு கொண்டு சென்றனர். அவர்களது விசாரணையில் சுமார் ரூ.66 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.
அதாவது, கொள்முதல் செய்த கணக்கு, விற்பனை செய்த கணக்கு ஆகியவற்றை மறைத்துள்ளனர். இவர்கள் விற்பனை செய்த பொருட்களுக்கான தொகையை சில்லறை வியாபாரிகளிடம் இருந்து பணமாக மட்டுமே செலுத்த அனுமதித்துள்ளனர். வங்கிக்கணக்கில் செலுத்த அனுமதிக்கவில்லை.
சில்லறை வியாபாரிகள் தங்களது ஜி.எஸ்.டி. எண்ணை தெரிவித்து முறையான பில் கேட்டு வாங்காததால், ஜி.எஸ்.டி. எண்ணுடன் கூடிய கம்ப்யூட்டர் ரசீது கொடுப்பதற்கு பதிலாக விற்பனையான பொருட்கள் மற்றும் தொகையை வெள்ளை தாளில் எழுதி கொடுத்துள்ளனர். பிற மாவட்டங்களில் விற்பனை செய்யும் பொருட்களுக்கான கூடுதல் கமிஷனை கணக்கில் காட்டுவதில்லை.
குட்கா, பான்பராக் போன்ற தடை செய்யப்பட்ட போதை பாக்குகளும் இந்த நிறுவனங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தினசரி லட்சக்கணக்கில் நடக்கும் வியாபாரம் குறித்த கணக்குகளை முறையாக பராமரிக்காமல் கம்ப்யூட்டரில் வேண்டுமென்றே அழித்துள்ளனர் என்பது உள்ளிட்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் நேற்று இரவு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
துணை மேயர் வருகை
முன்னதாக, 3 பேரையும் ஜி.எஸ்.டி. புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வந்த அலுவலகத்துக்கு வெளியே வணிக நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் மேற்கண்ட 3 பேரின் குடும்பத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி. அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மதுரை மாநகராட்சி துணைமேயர் நாகராஜனும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளார். பின்னர் அவர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த நடவடிக்கை
இது குறித்து ஜி.எஸ்.டி. விசாரணை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, வரி ஏய்ப்புக்கான அடிப்படை ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வரி ஏய்ப்பு தொகை மட்டும் தற்போதைக்கு கணக்கிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அபராதம், செலுத்த வேண்டிய மொத்த தொகை ஆகியவை குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
இது போன்ற முறைகேட்டில் ஈடுபடும் வியாபாரிகள், தொழில் அதிபர்கள் பட்டியல் ஆதாரங்களுடன் தயாரிக்கப்பட்டு, 3 கட்ட அதிகாரிகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 4-வது கட்ட ஒப்புதல் கிடைத்தவுடன் அவர்கள் மீதான நடவடிக்கை விரைவில் தொடங்கும். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் போலீசில் புகார் செய்யவில்லை, என்றும் தெரிவித்தனர்.