தமிழகம் முழுவதும் அரசு பணிக்காக 66 லட்சத்து 71 ஆயிரம் பேர் காத்திருப்பு


தமிழகம் முழுவதும் அரசு பணிக்காக 66 லட்சத்து 71 ஆயிரம் பேர் காத்திருப்பு
x

தமிழகம் முழுவதும் 66 லட்சத்து 71 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ்2, கல்லூரி படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அதற்கு 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

66.71 லட்சம் பேர்

இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 31ந் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரம் வருமாறு:

பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 98 ஆயிரத்து 879; பெண்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 71 ஆயிரத்து 680; மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 266 என மொத்தம் 66 லட்சத்து 70 ஆயிரத்து 825 பேராகும்.

மாணவர்கள்

அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 39 ஆயிரத்து 747 பேர். 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 33 ஆயிரத்து 380 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 44 ஆயிரத்து 601 பேர்.

46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 705 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 ஆயிரத்து 391 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 654 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story