குரூப்-4 தேர்வை 66 ஆயிரத்து 408 பேர் எழுதினர்


குரூப்-4 தேர்வை 66 ஆயிரத்து 408 பேர் எழுதினர்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை 66 ஆயிரத்து 408 பேர் எழுதினர். 9 ஆயிரத்து 727 தேர்வெழுத வரவில்லை.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை 66 ஆயிரத்து 408 பேர் எழுதினர். 9 ஆயிரத்து 727 தேர்வெழுத வரவில்லை.

குரூப்-4 தேர்வு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இன்று குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர், தட்டச்சர் உள்பட மொத்தம் 7 ஆயிரத்து 301 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

10-ம் வகுப்பு கல்வித்தகுதியை அடிப்படையாக கொண்டு இந்த போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இருப்பினும் பொறியியல், முதுநிலை உள்ளிட்ட பட்டப்படிப்புகளை தகுதியாக கொண்ட லட்சக்கணக்கான பட்டதாரிகளும் விண்ணப்பித்து இந்த தேர்வில் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் என 259 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்விற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 76 ஆயிரத்து 135 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு காலை 9.30 மணியளவில் தொடங்கி பகல் 12.30 மணியளவில் நிறைவடைந்தது.

தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்வு நடைபெற்ற மையங்களில் முறைகேடு நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க 34 பறக்கும் படைகளும், 53 மொபைல் யூனிட் அலுவலர்களும், 259 முதன்மை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு பணிபுரிந்தனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தேர்வு பணிகள் அனைத்தும் 272 வீடியோகிராபர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவண்ணாமலை வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது உதவி கலெக்டர் வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் தேர்வு மைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தேர்வில் 66 ஆயிரத்து 408 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 9 ஆயிரத்து 727 பேர் தேர்வு எழுத வரவில்லை.

சிறப்பு பஸ்கள்

முன்னதாக தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்திற்கு தேர்வர்கள் சென்று சேரும் வகையில் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.


Next Story