665 விநாயகர் சிலைகள் கரைப்பு


665 விநாயகர் சிலைகள் கரைப்பு
x

நீலகிரியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட 665 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நீலகிரி

கூடலூர்,

நீலகிரியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட 665 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூடலூர், ஓவேலி, தேவர்சோலை உள்ளிட்ட இடங்களில் இந்து முன்னணி சார்பில் 96 சிலைகள் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் கூடலூரில் நேற்று நடைபெற்றது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் தலைமை தாங்கினார்.

மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு ராஜகோபாலபுரம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் வழியாக சென்று ஐந்து முனை சந்திப்பு, ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகம் வழியாக காந்தி திடலை அடைந்தது.

பாண்டியாற்றில் கரைப்பு

தொடர்ந்து துப்புக்குட்டி பேட்டை, செம்பாலா, நந்தட்டி, கோழிப்பாலம் வழியாக பாண்டியாற்றை அடைந்தது. அங்கு 96 விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குருசாமி, ரவீந்திரன், சுரேஷ், குமார் உள்பட இந்து முன்னணியினர், பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதையொட்டி கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருள் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்துக்கு மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில்குமார், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள்

சேரிங்கிராசில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கமர்சியல் சாலை வழியாக காபிஹவுஸ் ரவுண்டானா பகுதிக்கு வந்த போது, பலத்த மழை பெய்தது. தொடர்ந்து கொட்டும் மழையிலும் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து காமராஜ் சாகர் அணையில் தீயணைப்பு வீரர்கள் படகில் சென்று 350 சிலைகளை கரைத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோத்தகிரியில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று நடந்தது. மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் கலந்துகொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மேள தாளத்துடன் வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. டானிங்டனில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று, உயிலட்டி நீர்வீழ்ச்சியில் 148 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

பொதுக்கூட்டம்

இதேபோல் குன்னூரில் இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடந்தது. இதையொட்டி சிம்ஸ் பூங்கா அருகே பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரமுகர்கள் பேசினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலம் தொடங்கி பெட்போர்டு, மவுண்ட் ரோடு, லாலி ஆஸ்பத்திரி, காட்டேரி வழியாக சென்றது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாஸ் பால்ஸ் நீர்வீழ்ச்சியில் 71 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. நீலகிரியில் 665 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.


Next Story