2023-24-ம் ஆண்டிற்கு ரூ.6,705 கோடி கடன் திட்ட அறிக்கை


2023-24-ம் ஆண்டிற்கு ரூ.6,705 கோடி   கடன் திட்ட அறிக்கை
x

நபார்டு வங்கி சார்பில் 2023-24-ம் ஆண்டிற்கு ரூ.6,705 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வௌியிட்டார்.

ராணிப்பேட்டை

நபார்டு வங்கி சார்பில் 2023-24-ம் ஆண்டிற்கு ரூ.6,705 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வௌியிட்டார்.

ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து வங்கிகளில் கடன் வழங்கும் செயல்பாடுகள் குறித்த வங்கியாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நபார்டு வங்கியின்‌ மூலம் 2023-2024-ம் நிதி ஆண்டிற்கு ராணிப்பேட்டை மாவட்ட அளவில் ரூ.6,705 கோடி மதிப்பீட்டிலான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

விவசாய மேம்பாட்டிற்காக வேளாண் விளைபொருட்கள் மற்றும் விற்பனை கடன் உதவிகள் சார்ந்த பணிகளுக்கு ரூ.3,032 கோடி, வேளாண்மை கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், அதை சார்ந்த நவீன எந்திரங்கள் பயன்படுத்துவதற்காகவும் ரூ.368 கோடி கடன் உதவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.6,705 கோடி கடன் உதவி

அதேபோன்று சிறு, குறு நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக ரூ.1,560 கோடி, ஏற்றுமதி கடன் உதவிக்கு ரூ.61½ கோடி, கல்வி உதவிக்கு ரூ.309 கோடி, வீட்டுக்கடன் ரூ.635 கோடியே 25 லட்சம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பணிகளுக்கு ரூ.40 கோடியே 85 லட்சம், வங்கிகளின் சமூக மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.38 கோடியே 20 லட்சம், முறைசாரா கடன் வழங்கும் அமைப்பு திட்டத்திற்கு ரூ.660 கோடி என மொத்தமாக ரூ.6,705 கோடி கடன் உதவிக்கான அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள், தொழில் முனைவோர்கள், மாணவர்கள் ஆகியோரும் கடன் பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட நபார்டு வங்கியின் மேலாளர் அருண்விஜய், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் பிரசன்னகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலேயம்மா ஆப்ரஹாம், மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சுபாஷ்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story