குரூப்-1 தேர்வை 672 பேர் எழுதினர்
நீலகிரி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 672 பேர் எழுதினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 672 பேர் எழுதினர்.
குரூப்-1 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் பதவிக்கான நேரடி நியமன குரூப்-1 எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி, புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, சி.எஸ்.ஐ. சி.எம்.எம். மேல்நிலைப்பள்ளி, பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் குரூப்-1 தேர்வு நடந்தது.
நீலகிரியில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில், 1,472 பேர் தகுதியானவர்களாக இருந்தனர். நேற்று காலை 8.30 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்தனர். பின்னர் ஹால் டிக்கெட்டை காண்பித்த பின்னர், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது.
672 பேர் எழுதினர்
நீலகிரி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 672 பேர் எழுதினர். 800 பேர் தேர்வு எழுத வரவில்லை. துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் சோதனை நடத்தினர். இதேபோல் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் கிருஷ்ணகுமார், கலெக்டர் அம்ரித், ஆர்.டி.ஓ. துரைசாமி ஆகியோர் புனித ஜோசப் பள்ளி தேர்வு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். முன்னதாக தேர்வர்களுக்காக அரசு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து தேர்வு எழுதியவர்கள் கூறுகையில், மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு நிகரான கேள்விகள் எப்போதும் இருக்கும். ஆனால், இந்த முறை தேர்வு எளிதாக இருந்தது. சரியான பயிற்சி இருந்தால் வெற்றி அடையலாம். ஆன்லைன், யூடிப் வீடியோக்களை பார்த்து பயிற்சி பெறுவதை விட, தேர்வு மையங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு வெற்றி பெற கூடுதல் வாய்ப்பு உள்ளது என்றனர்.