பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 68 கடைகளுக்கு 'சீல்'


பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 68 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 31 May 2023 3:15 AM IST (Updated: 31 May 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் கடந்த 16 மாதங்களில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக 68 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் கடந்த 16 மாதங்களில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக 68 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

கலந்தாய்வு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், 4 வட்டாரங்களில் உள்ள வணிகர், வியாபார, உணவக, வாகன உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டு உத்தரவு மற்றும் அரசு ஆணைகளின்படி நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வகையான ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரை கண்டறிந்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உள்ளாட்சி வாரியாகவும், வட்டார வாரியாகவும் மொத்தம் 251 அரசு அலுவலர்களை கொண்டு 50 கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஒத்துழைக்க வேண்டும்

குழுவினர் வாரத்திற்கு 2 நாட்கள் மற்றும் அவ்வப்போதும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த கண்காணிப்பு குழுவினரால் 2022-ம் ஆண்டு 1,400 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மொத்தம் ரூ.27¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 51 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 336 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.8½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. 17 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. அரசு ஆணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை யாரும் பயன்படுத்தக்கூடாது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா, மணிகண்டன், ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, பூஷணகுமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் இப்ராகிம்ஷா, வணிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story