திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 6,850 ஆமை குஞ்சுகள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 6,850 ஆமை குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 6,850 ஆமை குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவைகளை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்த கடத்தலை தடுக்க சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஆமை குஞ்சுகள்
அப்போது, மதுரையை சேர்ந்த முகமது அசார், ராமநாதபுரத்தை சேர்ந்த ஹபீஸ்நஸ்தார் ஆகிய 2 பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தபோது, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள அரிய வகை ஆமை குஞ்சுகள் இருந்தன. இதனையடுத்து அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 850ஆமை குஞ்சுகளை பறிமுதல் செய்தனர். திருச்சி விமான நிலையத்தில் ஆமைக்குஞ்சுகள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.51 ஆயிரத்து 441 மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன. வனத்துறையினரும் பறிமுதல் செய்யப்பட்ட ஆமை குஞ்சுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டு பணம்
இதேபோல் நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. முன்னதாக விமான பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஆண் பயணி ஒருவரிடம் ரூ.18 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.