அனைத்து கல்லூரிகளிலும் தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படும்

அனைத்து கல்லூரிகளிலும் தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டை சரியாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க முதல்-அமைச்சர் குழு நியமித்துள்ளார். அதை நாங்கள் மேற்பார்வை செய்து வருகிறோம். ஆனால் சில பல்கலைக்கழகங்களில் சில துணை வேந்தர்கள், மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கிறது என்பதற்காக 10 சதவீத இடஒதுக்கீடு (பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான மத்திய அரசின் இடஒதுக்கீடு) வழங்குவதற்கான அறிவிப்புகளை அளிக்கின்றனர்.
இதுபோன்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் எம்.எஸ்.சி. 'பயோ டெக்னாலஜி' என்ற படிப்பில் அங்கிருக்கும் 30 இடங்களில் 16 இடங்களை 'அன்ரிசர்வ்ட்" என்று துணை வேந்தர் கூறியிருந்தார். அது அப்படியல்ல.
69 சதவீத இடஒதுக்கீடுதான்....
கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள இந்த படிப்புக்கான 45 இடங்களில் 10 சதவீத இடத்திற்கு நிதியுதவி வழங்குவதாக மத்திய அரசு கூறியிருந்தது. எனவே அங்கு அதற்கான மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி கூறியிருந்தனர்.
ஆனால் அதற்கு பதிலாக முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு 11.10.2021 மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி, மாநில அரசின் இடஒதுக்கீட்டு கொள்கைதான் மாணவர் சேர்க்கையில் அமல்படுத்தப்படும் என்று தெளிவுபடுத்தினார்.
69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் தமிழக அரசு தெளிவாக உள்ளது. இதில் யாரும் சந்தேகப்பட வேண்டாம். இதுபற்றி மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தரிடம் பேசியிருக்கிறோம். முந்தைய அறிவிப்பை அவர் மாற்றுகிறார். பயோ டெக்னாலஜி படிப்பு தமிழகத்தில் 160 இடங்கள் உள்ளன.
பல்கலைக்கழகங்கள், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலைக்கல்லூரிகள் என எல்லாவற்றிலும் 69 சதவீத இடஒதுக்கீடுதான் பின்பற்றப்பட வேண்டும் என்று அவற்றுக்கு சுற்றறிக்கை அனுப்ப உள்ளோம்.
எப்படி பிரிப்பது?
பொதுவாக 69 சதவீத இடஒதுக்கீடு தவிர மீதமுள்ள 31 சதவீதம் ஓ.சி. (ஓபன் காம்படிஷன்) என்ற பொதுப்பிரிவில் வருவதாகும். அது 'அதர் கம்யூனிட்டி' என்பதல்ல. 'அன்ரிசர்வ்ட்' என்றும் அதை கூறக்கூடாது. இந்த ஓ.சி. பிரிவில், மதிப்பெண் அடிப்படையில் எந்த சாதியினரும் இடம் கேட்கலாம். அவர்கள் பெறும் ரேங்க் அடிப்படையில் இடம் வழங்கப்படும்.
இந்த 31 சதவீதம் போக மீதமுள்ள 69 சதவீதத்தில் 30 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 சதவீதம் மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 சதவீதம் எஸ்.சி. வகுப்பினருக்கும், ஒரு சதவீதம் எஸ்.டி. வகுப்பினருக்கும் வழங்கப்படும். எந்த வகை கல்விக்கும் இந்த இடஒதுக்கீடுதான் பின்பற்றப்படுகிறது. ஆனால் சில இடங்களில் நடக்கும் தவறுகளை நிவர்த்தி செய்யவே இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
அதன் அடிப்படையில், மதுரை பல்கலைக்கழகத்தில் உள்ள பயோ டெக்னாலஜிக்கான 30 இடத்தில், 9 இடங்கள் மதிப்பெண் அடிப்படையிலான ஓ.சி. பிரிவுக்கும் (31 சதவீதம்); 9 இடங்கள் (30 சதவீதம்) பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும்; 6 இடங்கள் (20 சதவீதம்) மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும்; 5 இடங்கள் (18 சதவீதம்) எஸ்.சி. பிரிவினருக்கும், ஒரு இடம் (ஒரு சதவீதம்) எஸ்.டி. பிரிவினருக்கும் அளிக்கப்படும்.
இதை அந்த பல்கலைக்கழக துணை வேந்தரிடம் கூறியிருக்கிறோம். அதற்கான சுற்றறிக்கை இன்றே பிறப்பிக்கப்படும்.
முழு பாடத்திட்டம்
கல்வியில் மட்டுமல்லாமல், அரசு வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற குழு அமைத்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே இதில் யாருக்கும் சந்தேகம் எழ வேண்டாம்.
கொரோனா காலகட்டத்தினால் ஏற்பட்ட தடையினால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து பல்கலைக்கழகம், கல்லூரிகளில் முழு பாடத் திட்டம் பின்பற்றப்படும். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான தேதி விரைவில் தீர்மானிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.