6-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி
ஜெயலலிதா 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நினைவிடம் அருகே ஜெயலலிதாவின் உருவப்படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று காலை 6 மணிக்கு முதல் நபராக மனிதநேய அறக்கட்டளை தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, கே.ஏ.செங்கோட்டையன், நந்தம் விஸ்வநாதன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, சி.விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் எம்.ஏ.சேவியர், முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்தன் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி உள்பட நிர்வாகிகள்-தொண்டர்களில் பெரும்பாலானோர் நேற்று கருப்பு சட்டை அணிந்திருந்தனர். அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நினைவுநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஓ.பன்னீர்செல்வம்
அதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.பி. மைத்ரேயன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து நினைவுநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக சேப்பாக்கம் வாலாஜா சாலையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நினைவுநாள் அமைதி ஊர்வலமாக நினைவிடத்துக்கு வந்தனர்.
சசிகலா - டி.டி.வி.தினகரன்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சசிகலா ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தையே சில வினாடிகள் சோகமாக பார்த்துவிட்டு, பின்னர் கண்ணீர் மல்க அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பொதுமக்கள் கூட்டத்தால்...
ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். பொதுமக்களில் பலர் அப்போது துக்கம் தாங்காமல் ஜெயலலிதா நினைவிடத்தில் அழுது புலம்பினர். இதனால் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
சென்னை தியாகராயநகரில் கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் டாக்டர் வி.சுனில் தலைமையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதுபோல தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில்...
ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதேபோல ஓ.பன்னீர்செல்வமும் தனது இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் மு.தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
சூசகமாய் அழைப்பு விடுத்த சசிகலா
ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்திய பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் நினைவு உறுதிமொழி ஏற்றனர். அப்போது எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்கும்போது, அதில் தி.மு.க.வை தாக்கியும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்றும், துரோகிகளை தூள்தூளாக்குவோம் என்பன போன்ற வரிகளை குறிப்பிட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் ஏற்ற உறுதிமொழியில், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றும், ஜெயலலிதாவை மீண்டும் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஆக்குவோம் என்று குறிப்பிடப்பட்டது.
ஆனால் சசிகலா தலைமையில் நிர்வாகிகள் ஏற்ற உறுதிமொழியில், தமிழக மக்களின் நலன் மற்றும் கட்சி வளர்ச்சிக்காகவும், உயிர் தொண்டர்களின் உயர்வுக்காகவும் ஒன்றிணைவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் அனைவரும் இணையவேண்டும் என்ற தனது கருத்தை முன்னிறுத்தி சசிகலா சூசக அழைப்பு விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.