7 ஆம்புலன்சுகளை இயக்க உத்தரவிட வேண்டும்
திண்டுக்கல் பகுதியில் இரவில் நிறுத்தி வைக்கப்படும் 7 ஆம்புலன்சுகளை இயக்க வேண்டும் என்று 108 தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதற்கிடையே தமிழ்நாடு 108 தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஒரு மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸ் உள்பட 40-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் சாலையூர் நால்ரோடு, ரெட்டியார்சத்திரம், பாப்பம்பட்டி, சிலுவத்தூர், செம்பட்டி, விருவீடு, அம்மையநாயக்கனூர் ஆகிய இடங்களில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரவில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் இரவு நேரத்தில் ஏதேனும் விபத்துகள் நடந்தால் திண்டுக்கல்லில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் உயிருக்கு போராடுபவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே இரவில் நிறுத்தப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்களை 24 மணி நேரமும் இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தனர். அதையடுத்து இலவச வீட்டுமனை பட்டா, காதொலி கருவி, மடக்கு குச்சிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.