3 பேரை காரில் கடத்தி தாக்குதல்; 7 பேர் கும்பல் கைது


3 பேரை காரில் கடத்தி தாக்குதல்; 7 பேர் கும்பல் கைது
x
திருப்பூர்


பல்லடம் அருகே சூதாட்டத்தில் இழந்த ரூ.50 ஆயிரத்தை மீட்க 3 பேரை காரில் கடத்தி சென்று தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சூதாட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேகாம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரபாகரன் (வயது30). பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய நண்பர்கள் திருப்பூரைச் சேர்ந்த பிரகாஷ்(30) மற்றும் மனோஜ் (26).

பிரபாகரன் தனது வீட்டிற்கு பிரகாஷ், மனோஜை வரவழைத்து பணம் வைத்து சீட்டு விளையாடுவது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு இடுவாய் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த மாசாணம் (30), பரத்குமார் (25) ஆகியோரும் பிரபாகரன் வீட்டிற்கு வந்து சீட்டு விளையாடி உள்ளனர். சீட்டு விளையாட்டில் மாசாணம், பரத்குமார் ஆகிய 2 பேரும் ரூ.50 ஆயிரம் வரை இழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பிரபாகரன் மீது மாசாணம், பரத்குமார் ஆகிய 2 பேரும் ஆத்திரத்தில் இருந்தனர். எனவே அவரை பழிவாங்க இருவரும் முடிவு செய்தனர். அதற்காக தங்களது நண்பர்களான தூத்துக்குடியை சேர்ந்த ராஜா(25), மருதுபாண்டி (22), துரைப்பாண்டி(23), பழனியை சேர்ந்த முத்துராஜ் (25), சென்னையைச் சேர்ந்த மணிகண்டன்(31) ஆகியோரை வரவழைத்தனர். பின்னர் 7 பேரும் சேர்ந்து மீண்டும் சீட்டு விளையாடலாம் உங்களது நண்பர்கள் இருவர்களையும் வரச் சொல்லுங்கள் என்று பிரபாகரனிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து சீட்டு விளையாடலாம் என நினைத்து வந்த பிரபாகரன், பிரகாஷ், மனோஜ் ஆகிய 3 பேரையும் மாசாணம் தலைமையிலான 7 பேர் கும்பல் காரில்இடுவாய் அருகே உள்ள பாரதிபுரத்திற்கு கடத்தி சென்றனர். அங்கு மாசாணம் வீட்டில் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்களிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

7 பேர் கைது

இதற்கு பிரபாகரனும் அவரது நண்பர்களும் பணம் ஏற்பாடு செய்து தருவதாக கூறி அவர்களிடமிருந்து தப்பி வந்து பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து இடுவாய் பாரதிபுரம் பகுதியில் தங்கி இருந்த, மாசாணம் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story