தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் கொலை, கஞ்சா வழக்கில் கைதான 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் கொலை, கஞ்சா வழக்கில் கைதான 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி, கோவில்பட்டியை சேர்ந்த 7 பேர் ஒரேநாளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கொலை
தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியைச் சேர்ந்த ஜெகவீரபாண்டியன் மகன் சக்திவேல் (வயது 52) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி பழையகாயல் தேவர் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லட்சுமணன் (27), சாத்தான்குளம் வீரஇடைகுடியை சேர்ந்த வேல்பாண்டி மகன் செல்லப்பா (23), விளாத்திகுளம் சூரங்குடி சி.ஆர் காலனியை சேர்ந்த பரமசிவம் மகன் கணேசமூர்த்தி (23) மற்றும் சாத்தான்குளம் முதலூர் ரோட்டை சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஆண்டோ வின்ஸ்டன் (20) ஆகியோரை சிப்காட் போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று கயத்தாறு பகுதியில் கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்திய வழக்கில் தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த சேகர் மகன் விஜயகுமார் (36), தூத்துக்குடி ஆரோக்கியபுரம் கோவில்பிள்ளைவிளையை சேர்ந்த பாலசந்திரன் மகன் ஜான் அற்புத பாரத் (33) மற்றும் ஆந்திரமாநிலம், விஜயவாடா, கணேஷ்நகரை சேர்ந்த சீக்கட்லா சட்டிபாபு (39) ஆகியோரை கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
குண்டர் சட்டம்
இதைத் தொடர்ந்து 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தர். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், லட்சுமணன், செல்லப்பா, கணேசமூர்த்தி, ஆண்டோ வின்ஸ்டன், விஜயகுமார், ஜான் அற்புத பாரத், சீக்கட்லா சட்டிபாபு ஆகிய 7 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மதுரை மற்றும் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
நடப்ப ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் உட்பட 123 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.