வீட்டில் பதுக்கிய 7 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்
வடலூரில் வீட்டில் பதுக்கிய 7 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடலூர்:
புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், வடலூரில் புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. இது பற்றி அறிந்ததும் வடலூர் போலீசார், புகையிலை பொருட்கள் எங்கிருந்து வருகிறது?, எங்கெங்கல்லாம் விற்பனை செய்யப்படுகிறது என்று தீவிரமாக கண்காணித்தனர்.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் வடலூர் சிட்கோ தொழிற்பேட்டை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பார்சலுடன் வந்தவரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் பின்தொடர்ந்தனர். பெரியாக்குறிச்சியில் சரவணன் (வயது 56) என்பவரது பெட்டிக் கடையில் பார்சலை கொடுத்தார்.
2 பேர் கைது
உடனே போலீசார் மடக்கிபிடித்து, பார்சலை திறந்து பார்த்தனர். அதில் புகையிலை பொருட்கள் இருந்தன. போலீசார் நடத்திய விசாரணையில் புகையிலை பொருட்களை கொண்டு வந்தவர், வடலூர் ஒம்சக்தி நகரை சேர்ந்த காளைசாமிமகன் வேல்முருகன் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனையும், வியாபாரியான சரவணனையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து வேல்முருகன் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வீட்டில் 7 மூட்டையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.