ரூ.7 கோடியில் சாலை பணிகள்
வேலூர் உட்கோட்டத்தில் ரூ.7 கோடியில் சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் என்று 3 உட்கோட்டங்கள் உள்ளன.
இந்த உட்கோட்டங்களில் சாலை அகலப்படுத்தும் பணி, சிறுபாலம் அமைத்தல், புதிய சாலை அமைத்தல், பழைய சாலைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேலூர் உட்கோட்டத்தில் ரூ.7 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதற்கட்டமாக அவர் அணைக்கட்டில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையை ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தார்சாலையை பெயர்த்து எடுத்து விட்டு சாலை அமைக்கப்பட்டதா?, சாலை தரமாக போடப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து வேலூர் உட்கோட்டத்தின் பல்வேறு இடங்களில் நிறைவு பெற்ற சாலை பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வேலூர் கோட்ட பொறியாளர் தனசேகரன், உதவி கோட்ட பொறியாளர்கள் பிரகாஷ், ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் அஜித்குமார், பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.