அரசு பஸ்களில் இலவசமாக பயணித்த 7¾ கோடி பெண்கள்


அரசு பஸ்களில் இலவசமாக பயணித்த 7¾ கோடி பெண்கள்
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அரசு டவுன் பஸ்களில் 7¾ கோடி பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

திண்டுக்கல்

பெண்கள் இலவச பயணம்


தமிழகத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு மே 7-ந்தேதி முதல் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் உள்ளிட்டோர் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.


இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டலம் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மொத்தம் 798 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.


திண்டுக்கல் மாவட்டத்தில் 8 கிளைகள் மூலம் 200 டவுன் பஸ்கள், 176 புறநகர் பஸ்கள், 38 மலை பஸ்கள் என மொத்தம் 414 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் 7 கிளைகள் மூலம் 109 டவுன் பஸ்கள், 249 புறநகர் பஸ்கள், 26 மலை பஸ்கள் என மொத்தம் 384 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


பெண்கள்-மாற்றுத்திறனாளிகள்


மேலும் திண்டுக்கல் மண்டலத்துக்கு உட்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மொத்தம் 309 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் 2 மாவட்டங்களிலும் தினமும் சராசரியாக சுமார் 2 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இது தினமும் பயணம் மேற்கொள்ளும் மொத்த பயணிகளில் 63 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் 2 மாவட்டங்களிலும் இதுவரை 7 கோடியே 81 லட்சத்து 47 ஆயிரத்து 871 பெண்கள், 7 லட்சத்து 46 ஆயிரத்து 527 மாற்றுத்திறனாளிகள், 44 ஆயிரத்து 483 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள், 36 ஆயிரத்து 670 திருநங்கைகள் என ஆக மொத்தம் 7 கோடியே 89 லட்சத்து 75 ஆயிரத்து 551 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.


இந்த இலவச பயண திட்டம் பெரும் உதவியாக இருப்பதால் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் டவுன் பஸ்சுக்காக காத்திருந்து பயணம் செய்கின்றனர். எனவே அரசு டவுன் பஸ்களை முறையாக நிறுத்தி பெண்களை ஏற்றி செல்லும்படி டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.


மேற்கண்ட தகவலை, மதுரை மண்டல மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.



Next Story