ரூ.7½ கோடியில் பணிமனை, ஆய்வக கட்டிடம்
கீரம்பூர் மற்றும் கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.7 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு இருப்பதாக ராஜேஷ்குமார் எம்.பி. கூறினார்.
அரசு தொழிற்பயிற்சி நிலையம்
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கணினி ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர், கட்டிட படவரையாளர், மின்சார பணியாள், தகவல் மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி சிஸ்டம் பராமரிப்பு, மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் ஆகிய பாடப் பிரிவுகளுடன் செயல்பட்டு வருகின்றது. மேலும் இங்கு உயர் தொழில்நுட்ப பிரிவுகள் 1.8.2023 முதல் தொடங்கப்பட உள்ளது.
இதையொட்டி நேற்று கீரம்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டாடா நிறுவனத்தின் முழுமையான பங்களிப்பில் ரூ.3 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் பணிமனை உடன் கூடிய ஆய்வகம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கீரம்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டிடம் கட்டும் பணியும், கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இதே மதிப்பீட்டில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 46 லட்சம் ஆகும்.
பயன்பாட்டிற்கு வரும்
நாமக்கல் நகரம் என்பது ஆட்டோ மொபைல் மற்றும் பாடி பில்டிங் பணிமனைகள் நிறைந்த நகரம் ஆகும். அதன் அடிப்படையில் இப்பயிற்சி நிலையத்தில் ஆட்டோ மொபைல் பாடி ரிப்பேர்ஸ் குறித்த படிப்பும் இங்கு உள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களை தற்போது உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தி கொள்ள வேண்டும். ஆய்வகம் அமைக்கும் பணி நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக எந்திரவியல் துறையில் கணினி உதவியுடன் பதிவு செய்யப்பட்ட விவரங்களுக்கேற்ப இரும்புத்துண்டுகளை பல்வேறு எந்திர பாகங்களாக உருவாக்கும் சி.என்.சி என்ற அதிநவீன லேத் எந்திரம் மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாட்டிற்கு நிறுவப்பட்டு உள்ளதை ராஜேஷ்குமார் எம்.பி. பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருள், நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரவிச்சந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.