மரத்தில் மினி வேன் மோதி 7 பேர் காயம்
வடமதுரை அருகே மரத்தில் மினி வேன் மோதி 7 பேர் காயம் படுகாயம் அடைந்தனர்.
வேடசந்தூர் அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). இவர் தனது உறவினர்களுடன் மினி வேனில் திருநாகேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அனைவரும் திருநாகேஸ்வரத்தில் இருந்து மீண்டும் உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். மினி வேனை நாகராஜ் ஓட்டினார். நேற்று முன்தினம் இரவு வடமதுரையை அடுத்த கொம்பேறிபட்டி அருகே மினி வேன் வந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து, அருகிலுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாகராஜ் மற்றும் வேனில் வந்த பூபதி (14), நிலா (32), பூஜா (13), பாலையா (44), ஹாசினி (9), பாலம்மாள் (45) ஆகிய 7 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.