7 லட்சத்து 64 ஆயிரத்து 140 வாக்காளர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2023-ன் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான லலிதா வெளியிட்டார். நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இறுதி வாக்காளர் பட்டியலானது வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று வெளியிடப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 860 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 7 லட்சத்து 64 ஆயிரத்து 140 உள்ளனர். அதில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 828 ஆண்களும் 3 லட்சத்து 87 ஆயிரத்து 292 பெண்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 20 பேரும் உள்ளனர்.
3 சட்டமன்ற தொகுதி
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் முறையே கீழ்க்கண்டவாறு வாக்காளர்கள் உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
சீர்காழி (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 834 ஆண்வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 663 பெண்வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் ஆக கூடுதல் 2 லட்சத்து 53 ஆயிரத்து 504 வாக்காளர்கள் உள்ளனர். மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 325 ஆண்வாக்காளர்களும், 1 லட்சத்து19 ஆயிரத்து 650 பெண்வாக்காளர்களும், 9 இதர வாக்காளர்களும் ஆக கூடுதல் 2 லட்சத்து 36 ஆயிரத்து 984 வாக்காளர்கள் உள்ளனர். பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 669 ஆண்வாக்காளர்களும், 1 லட்சத்து 38 ஆயிரத்து 979 பெண்வாக்காளர்களும், 4 இதர வாக்காளர்களும் ஆக கூடுதல் 2 லட்சத்து 73 ஆயிரத்து 652 வாக்காளர்கள் உள்ளனர்.
இணையதளம்
மேலும் 5.1.2023 முதல் 17 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மற்றும் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது பெயர்களை திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திட வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரடியாவோ அல்லது www.nvsp.in என்ற இணையதளம், Voter Helpline Mobile App மற்றும் Voterportal.eci.gov.in மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.