சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் 7 எம்.எல்.ஏ.க்கள் கைது


சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் 7 எம்.எல்.ஏ.க்கள் கைது
x

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது எல்.இ.டி. விளக்குகள் வாங்கியதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் நேற்று எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட கோவையில் 14 இடங்களில் சோதனை செய்தனர்.

இதையறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர். அவர்கள் அங்க தரையில் அமர்ந்து, போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனால் அங்கு கூடுதலாக போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

எம்.எல்.ஏ.க்கள் வந்தனர்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன் (கோவை வடக்கு), பி.ஆர்.ஜி.அருண்குமார் (கவுண்டம்பாளையம்), கே.ஆர்.ஜெயராம் (சிங்காநல்லூர்), செ.தாமோதரன் (கிணத்துக்கடவு), வி.பி.கந்தசாமி (சூலூர்), அமுல்கந்தசாமி (வால்பாறை), ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), மற்றும் நிர்வாகிகள் பலர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டுக்குள் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிர்வாகிகளில் சிலர் போலீசார் அமைத்து இருந்த தடுப்புகளை விலக்கிக்கொண்டு எஸ்.பி.வேலுமணி வீட்டுக்குள் செல்ல முயற்சி செய்தனர்.

250 பேர் கைது

இதையடுத்து 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது ஒருசிலர் வர மறுத்ததால் அவர்களை போலீசார் இழுத்து சென்றனர்.

பின்னர் அவர்களை வாகனங்களில் ஏற்றி, குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று அங்கு தங்க வைத்தனர்.

தொடர்ந்து அங்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வந்து கொண்டே இருந்ததால், எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு செல்லும் சாலையில் தடுப்புகள் அமைத்து யாரும் உள்ளே செல்லாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த நிர்வாகிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story