காதல் ஜோடிகளை வீடியோ எடுத்த சிறுவன் உள்பட 7 பேர் கைது
வேலூர் கோட்டையில் காதல்ஜோடிகளை வீடியோ எடுத்த விவகாரத்தில் சிறுவன் உள்பட 7 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
வீடியோ எடுத்தனர்
வேலூர் கோட்டைக்கு ஏராளமான காதல்ஜோடிகள் வருகின்றனர். அவர்கள் ஆங்காங்கே அமர்ந்து காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வேலூர் கோட்டைக்கு முகம்உள்பட உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் சில பெண்கள் உடையணிந்து தங்களது காதலர்களுடன் வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் சிலர் அந்த காதல் ஜோடிகளை வீடியோ எடுத்து விரட்டினர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பவேண்டாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
7 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வேலூரை சேர்ந்த சந்தோஷ் (வயது 22), கணியம்பாடியை சேர்ந்த இர்பான்பாஷா, கருகம்புத்தூரை சேர்ந்த இப்ராஹிம்பாஷா (24), கொணவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (20), முகமதுபயாஸ் (22), ஆஜ்புராவை சேர்ந்த அஷ்ரம்பாஷா (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்டவர்களின் தரப்பை சேர்ந்தவர்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கைதானவர்களை போலீசார் வேலூர் கோர்ட்டுக்கு பலத்த காவலுடன் அழைத்து சென்று ஆஜர்படுத்தி சிறுவனை தவிர 6 பேரை ஜெயிலில் அடைத்தனர்.
செல்போன்கள் பறிமுதல்
இதனிடையே வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் கோட்டைக்கு வந்தவர்களை சில வாலிபர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக தடுத்து நிறுத்தி அனுமதியின்றி வீடியோ பதிவு செய்துள்ளனர். இது தனிநபரின் சுதந்திரத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும், இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்கும் நோக்கில் உள்ளதாகவும், பெண்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம். மேலும் அவர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்காக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வீடியோவை பரப்புபவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.