பிரபல ரவுடி கைதை கண்டித்து மனைவி, மகள்கள் உள்பட 7 பேர் தீக்குளிக்க முயற்சி-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


பிரபல ரவுடி கைதை கண்டித்து மனைவி, மகள்கள் உள்பட 7 பேர் தீக்குளிக்க முயற்சி-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x

பிரபல ரவுடி கைதை கண்டித்து மனைவி, மகள்கள் உள்பட 7 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்

பிரபல ரவுடி கைது

சேலம் அன்னதானப்பட்டி மூணாங்கரடு பகுதியை சேர்ந்தவர் கோழி பாஸ்கர் (வயது 42). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த அருண்குமார் (31) என்பவரை வழிமறித்து கோழி பாஸ்கர் ரூ.5,400 மற்றும் செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோழி பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே வட்டமுத்தம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (25) என்பவரிடம் வழிப்பறி செய்த வழக்கில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் கோழி பாஸ்கரின் மனைவி உஷா (35), மகள்கள் கவுசல்யா, கோபிகா, தாய் மகாலட்சுமி உள்ளிட்ட 7 பேர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீக்குளிக்க முயன்ற 7 பெண்களையும் தடுத்தனர்.

பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கோழி பாஸ்கர் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்துவிட்டதாக கூறினர். அப்போது டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கோழி பாஸ்கரின் குடும்பத்தினரை சமாதானப்படுத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. தொடர்ந்து கூடுதல் பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு கோழி பாஸ்கரின் குடும்பத்தினரை குண்டுகட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story