வெடிகுண்டு வீசி ரவுடி கொலை வழக்கு:திண்டிவனம் கோர்ட்டில் 7 பேர் சரண்
செங்கல்பட்டு கோர்ட்டு அருகே வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டிவனம் கோர்ட்டில் 7 பேர் சரணடைந்தனர்.
திண்டிவனம்,
ரவுடி கொலை வழக்கு
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம்-இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ்(வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது தாம்பரம், ஓட்டேரி பகுதிகளில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக நேற்று முன்தினம் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக லோகேஷ் வந்தார். அப்போது அவர், தன்னுடன் வந்த சீனு என்ற சீனிவாசன், மோகன் ஆகியோருடன் கோர்ட்டு அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 5-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் லோகேஷ் மீது நாட்டு வெடிகுண்டை வீசியும், அரிவாளால் வெட்டி விட்டும், அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த லோகேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
திண்டிவனம் கோர்ட்டில் 7 பேர் சரண்
இந்த கொலை வழக்கில் தொடர்புள்ளதாக கூறி தாம்பரம் இரும்புலியூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராகுல் (26), மூக்கையன் மகன் தனசேகரன் (25), விஜயகுமார் மகன் பிரவீன்குமார் (23), முருகன் மகன் லோகேஷ் (27), ஏசுதாஸ் மகன் அரவிந்த்குமார் (25), கேசவராஜ் மகன் ரூபேஷ் (22), தேவகுமார் மகன் சாம்சன் (26) ஆகியோர் திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் எண்-1 மாஜிஸ்திரேட்டு கமலா முன்னிலையில் சரணடைந்தனர். சரணடைந்த 7 பேரையும் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கமலா உத்தரவிட்டார். இதையடுத்து 7 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.