என்ஜினீயர் வீட்டில் 7½ பவுன் நகை, ரூ.56 ஆயிரம் திருட்டு
என்ஜினீயர் வீட்டில் 7½ பவுன் நகை, ரூ.56 ஆயிரம் திருட்டு
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் என்ஜினீயர் வீட்டில் 7½ பவுன் நகை மற்றும் ரூ.56 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நகை- பணம் திருட்டு
நாகர்கோவில் வடசேரி ரேச்சல் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 29), சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் கடந்த 8-ந்தேதி தன் தாயாருடன் சென்னை சென்றார். பின்னர் நேற்று மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வின் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த பொருட்களும் கீழே வீசப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 7½ பவுன் நகை மற்றும் ரூ.56 ஆயிரம் பணம் ஆகியவை மாயமாகி இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தொியவந்தது.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்போில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளனரா? என்றும் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.