இலங்கை தமிழர்கள் 7 பேர் விடுவிப்பு
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
சிறப்பு முகாம்
திருச்சி புதுக்கோட்டை சாலையில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் என்ற பெயரில் தனியாக ஒரு வளாகம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்பட்டாலும், சொந்த நாட்டுக்கு செல்லும் வரை இந்த சிறப்பு முகாமில் தான் தங்கி இருக்க வேண்டும்.
117 பேர்
சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை, நைஜீரியா, பல்கேரியா, இந்தோனேசியா, வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 117 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கி உள்ளனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட்பயாஸ் ஆகியோரும் இந்த சிறப்பு முகாமில் தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வழக்குகளில் இருந்து விடுதலையான இலங்கை தமிழர்கள் 7 பேர் தங்களை விடுவிக்க கோரி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
7 பேர் விடுவிப்பு
இந்த நிலையில் அவர்களை விடுவிக்க அனுமதி கிடைத்ததை தொடர்ந்து நேற்று 7 பேரும் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனா். அவர்கள் 7 பேரையும் அவர்களின் உறவினர்களிடம் கே.கே.நகர் உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்த பாண்டியன் (வயது 40), கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வசித்து வந்த பார்த்திபன் (32), விருதுநகா் மாவட்டத்தில் வசித்து வந்த விஜயகுமார் (40), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கனகசபை (40), பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வந்த ரவிஹரன்(28), சசிஹரன் (30), ஏசுதாஸ் (26) ஆகிய இலங்கை தமிழர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
---