வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 ஆயிரத்து 55 பேர் விண்ணப்பம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 ஆயிரத்து 55 பேர் விண்ணப்பம்
x

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 7 ஆயிரத்து 55 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

திண்டுக்கல்

தமிழகம் முழுவதும் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடந்தது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், 18 வயது பூர்த்தியடைந்து, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்களுக்கு படிவம் 6-ம், ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6 பி-ம், பட்டியலில் இருந்து பெயரை நீக்கம் செய்ய படிவம் 7-ம், முகவரி, பெயர் ஆகியவற்றை திருத்துவதற்கு படிவம் 7-ம் வழங்கப்பட்டது. முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு விண்ணப்பம் அளித்தனர்.

அந்த வகையில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 792 பேரும், வேடசந்தூர் தொகுதியில் 888 பேரும், நத்தம் தொகுதியில் 1,244 பேரும், நிலக்கோட்டை தொகுதியில் 937 பேரும், ஆத்தூர் தொகுதியில் 1,067 பேரும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 935 பேரும், பழனி தொகுதியில் 1,192 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 55 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்தனர்.

மேலும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 848 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க கோரியும், 1,880 பேர் முகவரி மற்றும் பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பித்தனர். மேலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்களை இணைக்கவும் ஏராளாமானோர் விண்ணப்பம் அளித்தனர். இந்த சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.


Next Story