வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வெளி மாநிலத்திற்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, பெண்ணை கைது செய்தனர்.
போலீசாருக்கு தகவல்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மனைவி சென்னம்மாள் (வயது 36). இவரது வீட்டில் வெளிமாநிலத்திற்கு கடத்த ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் சென்னம்மாள் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 50 கிலோ எடை கொண்ட 154 மூட்டைகளில் மொத்தம் 7550 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெண் கைது
மேலும் சென்னம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி திருப்பத்தூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.