விதியை மீறி இயங்கிய 7 வாகனங்கள் பறிமுதல்
விழுப்புரம் நகரில் விதியை மீறி இயங்கிய 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் துணை போக்குவரத்து ஆணையர் ரஜினிகாந்த் உத்தரவின்படி விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் விழுப்புரம் நகர பகுதியில் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது 5 ஷேர் ஆட்டோக்கள், ஒரு லாரி ஆகியவை தகுதிச்சான்று இல்லாமலும், அனுமதிச்சீட்டு இல்லாமல் ஒரு சுற்றுலா வாகனமும் இயக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த 7 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும்பொருட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதில் தகுதிச்சான்று இல்லாமலும், காப்புச்சான்று இல்லாமலும், அனுமதிச்சீட்டு இல்லாமலும் இருப்பதால் இந்த வாகனங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், இச்சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.