சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குடிநீர் தொட்டி ஆபரேட்டருக்கு 7 ஆண்டு ஜெயில்-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
ஓமலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குடிநீர் தொட்டி ஆபரேட்டருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாலியல் தொல்லை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 32). இவர் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். ஈஸ்வரன் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி 7 வயதுடைய 2-ம் வகுப்பு படித்த சிறுமியை செல்போனில் வீடியோ கேம் விளையாட தருவதாக கூறி அங்கிருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்றார்.
பின்னர் அவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி தெரியவந்ததும் சிறுமியின் தாயார் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஈஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
7 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கில் போலீசார் தரப்பில் விரைவாக கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ஈஸ்வரனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.