டிரைவரை தாக்கி லாரியை கடத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
டிரைவரை தாக்கி லாரியை கடத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சரக்கு ஏற்றி வந்த லாரி
சென்னை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் மணி (வயது 51). லாரி டிரைவரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னையில் இருந்து லாரியில் ரேஷன் பாமாயில் ஏற்றிக்கொண்டு, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு வந்தார். அங்கு சரக்குகளை இறக்கிய பின்னர் அவர், திருச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு சென்று தனியார் நிறுவன சோப் பவுடர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டார்.
2017-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி திண்டுக்கல்-திருச்சி சாலையில் வண்ணாங்கோவில் அருகே லாரி வந்தபோது, இரவு 8.30 மணியளவில் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு, அவர் அங்குள்ள கடையில் டிபன் சாப்பிட்டார். சிறிதுநேரம் கழித்து மீண்டும் லாரியை எடுக்க வந்தபோது, தஞ்சை மனோஜிபட்டி சோழன்நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (33) டிரைவர் சீட்டில் அமர்ந்து இருந்தார்.
சிறை தண்டனை
இதைக்கண்ட மணி அதிர்ச்சி அடைந்து அவரிடம் என்ன செய்கிறாய்? என்று கேட்டார். உடனே சந்தோஷ்குமார் கத்தியை காட்டி மிரட்டி மணியை கீழே தள்ளிவிட்டு லாரியை கடத்திச்சென்றார். இதில் காயம் அடைந்த மணி ராம்ஜிநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜராகினார். இந்த வழக்கில் நீதிபதி மீனா சந்திரா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ்குமாருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.