சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்ஆட்டோ டிரைவர், பேரூராட்சி கவுன்சிலருக்கு தலா 7 ஆண்டு சிறைகடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்ஆட்டோ டிரைவர், பேரூராட்சி கவுன்சிலருக்கு தலா 7 ஆண்டு சிறைகடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x

சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆட்டோ டிரைவர், வி.சி.க. பேரூராட்சி கவுன்சிலர் ஆகிய 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலூர்

சிறுமியுடன் பழக்கம்

காட்டுமன்னார்கோவில் குப்புபிள்ளைசாவடி (கஸ்பா) தெற்கு தெருவை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் வினோத்ராஜ் (வயது 36). திருமணமானவர். ஆட்டோ டிரைவரான இவர், உடல்நிலை சரியில்லாத 17 வயது சிறுமியை அடிக்கடி தனது ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று வந்தார்.

அப்போது அந்த சிறுமியுடன், வினோத்ராஜ் பேசி பழகி வந்தார். இந்நிலையில் கடந்த 4.6.2020 அன்று வினோத்ராஜ், அந்த சிறுமி வீட்டுக்கு சென்று அங்கிருந்த சிறுமியின் தாயிடம், சிறுமியை தனது மனைவி என்று குறிப்பிட்டு, எனது மனைவியை வெளியே அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட அந்த சிறுமி, அண்ணன் போல் பழகிய நீங்கள் இப்படி பேசலாமா? என்று தட்டிக்கேட்டார். அவரது தாயும் அவரிடம் சண்டை போட்டார்.

2 பேர் கைது

சற்று நேரத்தில் வந்த சிறுமியின் தந்தையும் அவரிடம் தட்டிக்கேட்டார். அப்போது வினோத்ராஜூடன் வந்த கோவில்பத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரும், காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியின் 12-வது வார்டு கவுன்சிலருமான பன்னீர்செல்வம் (52) என்பவரும் சிறுமி, அவரது பெற்றோரிடம் தகராறு செய்து, அவர்களை திட்டி, மானப்பங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் மனவேதனையில் இருந்த அந்த சிறுமி அதன்பிறகு குப்பங்குழியில் உள்ள ஆலமர விழுதில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாகவும், போக்சோ சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்து வினோத்ராஜ், பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

தலா 7 ஆண்டு சிறை

இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.

அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் 2 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.12 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு அரசின் நலவாழ்வு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.


Next Story