தம்பியை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
தம்பியை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
கொலை
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 49). இவரது அண்ணன் ராஜேந்திரன். தொழிலாளிகளான இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29.4.2019 அன்று ரவியின் வீட்டில் இருந்த தென்னை மரத்தில் இருந்த தேங்காய், ராஜேந்திரன் வீட்டில் விழுந்தது. இது தொடர்பாக ராஜேந்திரன், ரவி ஆகியோருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது.
இதையடுத்து அவர்களை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்தனர். மறுநாள் ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் தெருவில் நடந்து சென்றபோது, மீண்டும் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் வினோத் ஆகியோருக்கும், ரவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரவியை ராஜேந்திரன் அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ரவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
7 ஆண்டுகள் சிறை
இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரன், வினோத்தை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், ராஜேந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் வினோத்தை விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து ராஜேந்திரனை திருச்சி சிறையில் போலீசார் அடைத்தனர்.