இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய ஊழியருக்கு 7 ஆண்டு சிறை


இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய ஊழியருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய தனியார் நிறுவன ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண், புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் புதுச்சேரி ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த அசீன்பாஷா மகன் அமீன்பாஷா (26) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அமீன்பாஷாவுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த 2018-ல் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அமீன்பாஷா, அந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார். பின்னர் அந்த பெண், அமீன்பாஷாவிடம் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

தனியார் நிறுவன ஊழியருக்கு சிறை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீன்பாஷாவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட அமீன்பாஷாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமீன்பாஷா, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.


Next Story