திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் - மாடுகள் முட்டி 70 பேர் காயம்
திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டி 70 பேர் காயம் அடைந்தனர்
திருமங்கலம்
திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டி 70 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் ஸ்ரீசுந்தராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 750 காளைகள், 500 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 8 மணிக்கு உறுதிமொழி ஏற்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. முதலில் கரடிக்கல்லைச் சேர்ந்த 3 கோவில் மாடுகள் வரிசையாக விடப்பட்டது
10 சுற்றுகளாக நடைபெறும் இந்த கரடிக்கல் ஜல்லிக்கட்டு போட்டியில் சுற்றுக்கு 50 மாடுபிடி வீரர்கள் வீதம் போட்டியில் கலந்து கொண்டனர். முன்னதாக போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
மருத்துவ சோதனை
கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னரே காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல் 750 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றனர். அவர்களுக்காக கரடிக்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் 5 மருத்துவர்கள் கொண்ட 25 பேர் கொண்ட மருத்துவக்குழு மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்துக்கும் கட்டில், பீரோ, அண்டா, குத்துவிளக்கு, சைக்கிள், தங்க காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. உச்சபட்டி தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் காளை களத்தில் நின்று சிறப்பாக விளையாடியதற்காக 5 பவுன் நகை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் 70 பேர் காயம் அடைந்தனர். இதில் 9 பேர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதலுதவி சிகிச்சை
ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு சிவப்பிரகாஷ் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டு உரிமையாளர்கள், பார்வையாளர்கள் காயம் ஏற்பட்டவர்களுக்கு கரடிக்கல் கிராமத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் ஏற்பட்டவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் ஆண்டிச்சாமி, மொக்கராசு, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.