2 பெண்களிடம் 7½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு


2 பெண்களிடம் 7½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x

ஈரோட்டில் 2 பெண்களிடம் 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் 2 பெண்களிடம் 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மளிகை கடை

ஈரோடு சங்கு நகரை சேர்ந்தவர் அயுஸ்பாட்சா. இவருடைய மனைவி குல்சாரா (வயது 45). இவர்களுடைய மகன் சதாம்உசேன். இவர்கள் ஈரோடு ஆசிரியர் காலனி பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். கடையை 3 பேரும் கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் -மனைவி மற்றும் மகன் சதாம் உசேன் ஆகியோர் கடையில் இருந்தனர்.

அப்போது டிப்டாப்பாக ஆடை அணிந்து வாலிபர் ஒருவர் கடைக்கு வந்தார். அவர் பொருட்கள் வாங்குவதுபோல் அங்கும் இங்குமாக கடைக்குள் நடந்து சென்றார். பின்னர் அந்த வாலிபர் கேட்ட பொருளை கொடுத்து விட்டு ஆயுஸ்பாட்சா மற்றும் அவருடைய மகன் சதாம் உசேன் ஆகியோர் கடையில் இருந்த பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தனர். குல்சாரா கடையின் வெளியில் இருந்த குப்பையை சுத்தப்படுத்தி கொண்டிருந்தார்.

5 பவுன் நகை பறிப்பு

அப்போது அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் குல்சாரா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த குல்சாரா திருடன், திருடன் என கூச்சலிட்டார். சத்தத்தை கேட்டு ஆயுஸ்பாட்சா மற்றும் அவரது மகன் சதாம் உசேன் ஆகியோர் அந்த வாலிபரை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினர்.

ஆனால் சிறிது தூரத்தில் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்தவருடன் ஏறி அந்த வாலிபர் தப்பிச்சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெண்கள் அச்சம்

இதேபோல் ஈரோட்டில் மேலும் ஒரு தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மனைவி அம்சா (வயது 37) இவர் நேற்று முன்தினம் இரவு கடைக்கு தனியாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். அருகில் வந்ததும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர் அம்சா கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்தார். பின்னர் அங்கிருந்து 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

கோரிக்கை

இதுகுறித்து புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற சம்பவம் பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, சங்கிலி பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கத்தொடங்கி உள்ளதால் போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story