வக்கீல் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை
நெல்லையில் வக்கீல் வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்து 70 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.
நெல்லையில் வக்கீல் வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்து 70 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வக்கீல்
நெல்லை தெற்கு பைபாஸ் பி.பி.சி. காலனியை சேர்ந்தவர் கருத்தையா மகன் செல்லத்துரை (வயது 60). வக்கீல். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், மகளும், மகனும் உள்ளனர்.
மகளும், மகனும் திருமணம் ஆகி சென்னையில் வகித்து வருகிறார்கள்.
இவர்களை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லத்துரை தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று காலையில் வீடு திரும்பினார்.
கொள்ளை
அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்குள்ள பீரோக்களை பார்த்தார்.
அப்போது மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து அதில் இருந்த சுமார் 70 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மிளகாய் பொடி
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மர்ம நபர்கள் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கதவை உடைத்து மாடி படிக்கட்டு வழியாக வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வீட்டு கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மற்றொரு வீடு
இதேபோல் வக்கீல் செல்லத்துரை வீட்டுக்கு அருகே ரெட்டியார்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மகாராஜன் (48) என்பவர் வீடு உள்ளது.
இவர் கடந்த 3-ந்தேதி தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலையில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஆயிரம் ரூபாயை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்தும் மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 2 சம்பவங்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.