70 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலை ஜாக்கிகள் மூலம் நகர்த்தும் பணி


70 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலை ஜாக்கிகள் மூலம் நகர்த்தும் பணி
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே 4 வழிச்சாலை பணிக்காக 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலை ஜாக்கிகள் மூலம் நகர்த்தும் பணி நடந்து வருகிறது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு 194 கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை (என்.எச். 45 ஏ) செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த 4 வழிச்சாலையானது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் (என்.எச்.45) விழுப்புரம் ஜானகிபுரம் கூட்டுசாலையில் இருந்து இணைந்து ஆரம்பமாகிறது.

இந்த 4 வழிச்சாலை மூலம் வாகனங்கள் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலையின் வழியாக நாகப்பட்டினம் சென்றடையும். இந்த புறவழிச்சாலை விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தம் 134 கிராமங்களின் வழியாக கடக்கிறது. இத்திட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்க மேற்கண்ட 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் 45 மீட்டர் அகலத்திற்கு நிலம், வீடுகள், கடைகள் உள்ளிட்டவை கடந்த 2018-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் விழுப்புரம் அருகே அற்பிசம்பாளையம், சாலையாம்பாளையம், ஓட்டேரிப்பாளையம், சுந்தரிப்பாளையம், நன்னாட்டாம்பாளையம், ஆனாங்கூர், சாமிப்பேட்டை, கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அவர்கள் தற்போதைய சந்தை மதிப்பீட்டின்படி உரிய இழப்பீடு கேட்டு இதுநாள் வரையிலும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கையகப்படுத்தப்பட்ட கோவில்

இந்த 4 வழிச்சாலை பணிகள் ரூ.6,431 கோடியில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. தற்போது இப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே இச்சாலை பணிக்காக விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் கிராமத்தில் உள்ள கெங்கை முத்துமாரியம்மன் கோவிலை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது.

இந்த கோவில் 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். கடந்த 2000 மற்றும் 2012-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் ஆண்டுதோறும் கிராம மக்களால் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 4 வழிச்சாலை பணிக்காக இந்த கோவில் கையகப்படுத்தப்பட்ட நிலையில் அதற்கான இழப்பீடு வழங்குவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ரூ.73 லட்சம் மதிப்பீடு செய்து அதனை இழப்பீடாக வழங்க நகாய் நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தது. ஆனால் நகாய் நிறுவனமோ கோவிலுக்குரிய இழப்பீடாக வெறும் ரூ.23 லட்சத்து 36 ஆயிரத்தை மட்டுமே வழங்கியது. அந்த தொகைக்கான காசோலையை 1.12.2022-ல் கோவில் நிர்வாகத்திடம் அறநிலையத்துறை வழங்கியது.

நகர்த்தும் பணி

இதையடுத்து கோவிலை இடித்து அப்புறப்படுத்துவதற்கான ஆயத்த ஏற்பாட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இறங்கினர். இதனிடையே இழப்பீடாக கிடைக்கப்பெற்ற தொகையின் மூலம் புதியதாக கோவில் கட்ட முடியாது என்பதாலும், புதிய கோவில் கட்டுவதற்கு ரூ.70 லட்சம் வரை பணம் தேவைப்படும் என்பதால் தற்போது இருக்கின்ற கோவில் இடிக்கப்படாமல் அதனை பாதுகாக்க கோவிலை சற்று நகர்த்தி வைக்க கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

இதற்காக வீடுகள், கோவில்கள், கட்டிடங்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு நகர்த்தி வைக்கும் பீகாரை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் பேசப்பட்டு அந்நிறுவனத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கெங்கை முத்துமாரியம்மன் கோவிலை நகர்த்தி வைப்பதற்காக கெங்கராம்பாளையத்தில் முகாமிட்டு அப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்முரம்

இதற்காக கோவிலுக்கு கீழ் பகுதியில் 4 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டு கோவிலின் 4 புறமும் ஹைட்ராலிக் ஜாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது. இக்கோவில் தற்போது தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 40 அடி தூரத்தில் உள்ள நிலையில் வடக்குப்புறமாக 61 அடி தூரத்திற்கு அப்படியே கோவில் நகர்த்தி வைக்கப்பட உள்ளது. அவ்வாறு கோவில் நகர்த்தி வைக்கப்பட உள்ள இடத்தில் தற்போது 7 அடி உயரத்தில் கடகால் போட்டு கருங்கல், கட்டுக்கல் கொண்டு வரப்பட்டு அங்கு கோவிலை வைப்பதற்கான கட்டுமான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

இப்பணிகள் அனைத்தும், இழப்பீடாக வரப்பெற்ற தொகையில் ரூ.21 லட்சம் மதிப்பில் நடந்து வருகிறது. இப்பணிகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் மற்றும் மாரிமுத்து உள்ளிட்ட கிராம மக்கள் மேற்பார்வையிட்டு செய்து வருகின்றனர். இப்பணிகள் முடிவதற்கு 2 மாதம் வரை ஆகும். அதன் பிறகு கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.


Next Story