மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி 700 போலீசார் பாதுகாப்பு
வேலூரில் நடைபெறும் மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வேலூர்-காட்பாடி இடையிலான போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் நடைபெறும் மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வேலூர்-காட்பாடி இடையிலான போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மயானக்கொள்ளை திருவிழா
வேலூரில் மயானக்கொள்ளை திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வேலூர் சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், விருதம்பட்டு, ஓல்டுடவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அங்காள அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக பாலாற்றங்கரைக்கு எடுத்து வருவார்கள்.
மேலும் ஏராளமான பக்தர்கள் சாமியை வழிபடவும், நேர்த்திக்கடனை செலுத்தவும் பாலாற்றில் குவிவார்கள். இதையொட்டி புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நடந்தது. அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவில் பக்தர்கள் பலர் சாமிவேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து வருவார்கள். எனவே பாதுகாப்பு கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
வேலூர் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் மயானகொள்ளை விழாவுக்கு 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
போக்குவரத்து மாற்றம்
இந்த நிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகர், பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ரவி, சீனிவாசன் உள்பட பலர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். சப்பரம் வரும் பாதை, மக்கள் சாமி வழிபடும் இடங்களில் நெரிசல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.
விருதம்பட்டில் இருந்து சப்பரங்கள் புதிய பாலாற்று பாலத்தின் வழியாக வர உள்ளதால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள். எனவே வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
அதாவது இன்று பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை புதிய பாலாற்று பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. பழைய பாலாற்று பாலம் வழியாக மட்டுமே வேலூர்-காட்பாடி இடையிலான போக்குவரத்து நடைபெறும்.
வேலூரில் இருந்து காட்பாடி ரெயில் நிலையம் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலை அறிந்து முன்கூட்டியே திட்டமிட்டு ரெயில் நிலையம் புறப்பட்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கோபுரங்கள்
சாமி ஊர்வலத்தின்போது தேவைக்கு ஏற்ப மின்சாரம் தடை செய்வது உள்ளிட்ட முன் ஏற்பாடு பணிகளும் நடந்து வருகிறது. இந்த விழாவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல்துறை சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளை, திருட்டு, நகைபறிப்பு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பெரிய அளவிலான போகஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு, 2 கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தபடி போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
விழாவையொட்டி நேற்று பாலாற்றில் சாமி சிலை வடிக்கும் பணி மும்முரமாக நடந்தது. பக்தர்கள் பலர் காப்புகட்டி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கன்னத்தில் அலகுகுத்தியும் வழிபட்டனர்.